Saturday, April 2, 2011

தமிழ் நூல்கள்

                         ஜெயமோகன் படைப்புகள்

 ஏழாம் உலகம்
 நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன!
"ஏழாம் உலகம்" அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற "நான் கடவுள்" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.


  மேற்குச்சாளரம்
இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசபப்டுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாக பேசபப்டாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சகன்) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது

நிகழ்தல் 
அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கபட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச் செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெருகிவிடுகிறதேயன்றி அவிழ்க்கப்படுவது இல்லை. அந்த வகையில் ரகசியங்களின், வாழ்வின் நுண்ணிய தருணங்களின் உற்பத்தியாளனாக ஒரு படைப்பாளி மாறிவிடுகிறான். ஜெயமோகனின் இந்த அனுபவக் கட்டுரைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குபவை. நாம் புரிந்துகொள்ளாமல் கடந்துவந்துவிட்ட நமது நிழல்களை பேச வைப்பவை. மனிதர்களுக்குள் இடையறாது பெருகும் உணர்ச்சிகளின் நதியிருந்து ஒரு பொதுமையை கண்டடைபவை.

பண்படுதல் பண்பாட்டு விவாதங்கள்

நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் Ôசாப்பிட்டாச்சா?Õ என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப்பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தை பதற அடித்து பல லட்சம்பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது? நம் பண்பாட்டின் ஆழத்தில் அதற்கான விடை இருக்கலாம். அந்த ஆழத்தை தேடிச்செல்லும் கட்டுரைகளும் விவாதங்களும் அடங்கியது இந்த நூல். பண்பாடென்பதே ஒரு விவாதம் என்பதனால் பேசும்தோறும் நாம் பண்பாட்டை உருவாக்குகிறோம். இந்நூல் பண்பாட்டுப்பிரச்சினைகளை, பண்பாடு என்னும் பிரச்சினையை பல கோணங்களில் விவாதிக்கிறது. நம்முடைய நீண்ட மரபின் பின்னணியிலும் இன்றைய நவீன யுகத்தின் பின்னணியிலும் இந்நூல் தன் ஆய்வுகளை விரித்துக்கொள்கிறது

 ஊமைச்செந்நாய்

சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன.இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் 'கதை'தான்.இவற்றில் நுட்பமான யதார்த்தத்தளம் சார்ந்த ஆக்கங்கள் உண்டு. மிகைபுனைவுகளும் உண்டு. ஆனால் முழுக்க முழுக்க படைப்பூக்கத்தின் தற்செயலை நம்பி எழுதப்பட்டவை. அதனாலேயே ஆசிரியனும் விளக்கிவிட முடியாத பல தருணங்கள் கொண்டவை. செவ்வியலின் அடிப்படையான ஓர் இயல்பை இவற்றில் வாசகர் காணமுடியும். வரிகள்தோறும் செறிந்திருக்கும் கவித்துவ உட்குறிப்புகள்.தமிழ் நவீனகவிதைகள் அடைந்தவற்றைவிட அதிகமான கவித்துவப்படிமங்களை இந்த உரைநடை முன்வைத்துச் செல்கிறது.  
நலம் சில விவாதங்கள்



அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலைக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருப்பான் என்றார் காந்தி. மனித உடல் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம். தன் உடலை ஒருவன் புரிந்துகொள்ளும் அளவுக்கு எந்த மருத்துவரும் புரிந்துகொள்ள முடியாது. இந்நூல் உடலையும் உடலுடன் இணைந்த மனத்தையும் குறித்த விவாதங்கள் அடங்கியது. நம்முடைய சமகால மருத்துவப்பிரச்சினைகள் மாற்றுமருத்துவச் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான உரையாடல்களை இது திறக்கிறது




தனிக்குரல்
ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல்ல. கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமும் உரையாடலுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலமும் அவன் தனது சூழலை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறான். அவன் தற்செயலாக, போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் மீண்டும் மீண்டும் பலராலும் பதில் சொல்லப்பட்டு நிரந்தரம் பெற்று விடுகின்றன. அந்த வகையில் ஜெயமோகன் தனது பேச்சுகளின் ஊடாக முன்வைத்த பல கருத்துகள் கடந்த இருபதாண்டுகளில் நவீன தமிழ் இலக்கிய சூழலின் தொடர்ச்சியான பேசுபொருளாக இருந்திருக்கின்றன. கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கின்றன. சில சமயம் அவை தர்க்கத்தின் பாற்பட்டவை. சில சமயம் காழ்ப்பின் வழி நிற்பவை. இந்தத் தொகுதியில் ஜெயமோகன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெறுகின்றன. அவை பல்வேறு கலை இலக்கிய, சமூக பிரச்சினைகளை     தீவிரமாக விவாதிக்கின்றன.


சிலுவையின் பெயரால்
கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லாத் திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. அது ஞானவாத கிறித்தவம் எனப்படுகிறது. கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானகுருவாகக் கருதுவது அது.

ஜெயமோகன் சிறுகதைகள் 

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலும், அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ள தொகுப்பு இது. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவைத் தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது. 

  முன்சுவடுகள்



 நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது.
   
ஜெயமோகன் குறுநாவல்கள்

இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்டவை. இக்கதைகள் விதவிதமான நிலக்காட்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம் செய்யும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது. 


No comments:

Post a Comment