Saturday, April 2, 2011

சுஜாதாவின் படைப்புகள்

ப்ரியா
லண்டன், ஜெர்மனி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை "ப்ரியா". ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட , அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸுடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். இது சினிமாவாக எடுக்கப்பட்டபோது ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்தித்து நாவலின் சுவாரஸ்யம் காணாமல் அடிக்கப்பட்டது தனிக் கதை. 


சிவந்தகைகள் 
 சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் "சிவந்த கைகள்" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமி வேக சுழல் கதை.


கொலை அரங்கம்


குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று. 





அனிதா-இளம் மனைவி
‘அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள். 


ஒரே ஒரு துரோகம்


ஒரே ஒரு துரோகம் 1983ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது. 



மாயா

 ‘சாவி’ ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது ‘மாயா’. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. கணேஷ், வஸந்த் ஆஜராகும் சூப்பர் ஃபாஸ்ட் கதையும்கூட.







 ரோஜா
 
 கல்கி இதழில் வெளியான ரோஜா கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்தும் நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி





விடிவதற்குள் வா 
 தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் தொடர்கதையாக வந்தது.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது.

மலை மாளிகை


கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன




தப்பித்தால் தப்பில்லை 

 ‘தப்பித்தால் தப்பில்லை’, ‘மேகலா’ மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஒரு குற்றம் இழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிவிட்டால், செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?





முதல் நாடகம் : நாடகங்கள்
சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை. ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அபப்டியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.
இரண்டு, நாடகம் என்பது அடிப்படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான், அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. இதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே. மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது.
இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை. -ஜெயமோகன்
நகரம்


 இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பதினான்கு சிறுகதைகளும் 1972-73ம் வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. மிகச் சிறந்த கதையாக தேசிய அங்கீகாரம் பெற்றது, ‘நகரம்’. பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டப்பட்ட கதையும்கூட.





1 comment:

  1. கொட்டும் மழையில்.......
    ஒரு கையில் காபியும்.....
    இன்னொரு கையில் சுஜாதாவின் குறுநாவல்களும்.......


    ”சுவாசமாய் மழையும்....
    புன்னகையாய் கணேஷ் வஸந்தும்....”


    அநுபவம் புதுமை.....

    ””தேதா””

    ReplyDelete